சென்னையில், எழிலகம் முன்பு ஆர்ப்பாட்டம் 2-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

கோர்ட்டு தடையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் செய்தனர்.

Update: 2017-09-08 21:45 GMT
சென்னை,

கோர்ட்டு தடையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் செய்தனர். சென்னையில் எழிலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு எடுக்க உள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும், 7-வது ஊதியக்குழுவை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.

இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ-ஜியோ அமைப்பில் விரிசல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டு உள்ளதால் போராட்டத்தை ஒத்திவைக்கலாம் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோவன் கூறினர். அதை ஏற்றுக் கொள்ளாத மற்ற அமைப்பாளர்கள் இருவரையும் நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர்களாக மாயவன், சுப்பிரமணியன் ஆகியோரை தேர்வு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவு சார்பில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் செய்துவிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை போராட்டக்குழுவினர் நிராகரித்தனர். கோர்ட்டு தடையை மீறி நேற்று 2-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவு சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழிலகம் முன்பு ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியதாவது:-

கோர்ட்டு தீர்ப்புக்கு தலைவணங்கி மறியல் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு ஆர்ப்பாட்டமாக நடத்துகிறோம். காலவரையற்ற வேலைநிறுத்தம் என்று அறிவிக்கவில்லை. 7, 8-ந்தேதி வேலைநிறுத்தம் என்றுதான் அறிவிக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் எங்கள் கூட்டமைப்பின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் போராட்டத்தை தொடர்வதா? என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

91.7 சதவீத ஆசிரியர்கள் நேற்று பள்ளிகளுக்கு வந்தனர் என்று டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர். சில கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னையில் சில அரசு துறைகளில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் வேலைக்கு வரவில்லை. அதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள இயக்குனரக அலுவலகங்களில் பலர் வேலைக்கு வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்