ஜெயலலிதா வீடு, சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் இணைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2017-09-05 21:45 GMT
சென்னை,

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றினால், அது தவறான முன்உதாரணமாகிவிடும். இந்த வீடு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளது. எனவே, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் ‘வேதா இல்லத்தை’, நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கு விளம்பர நோக்கத்துக்காக தொடரப்பட்டுள்ளது. இந்த வீடு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பெயரில் உள்ளது. அந்த வீட்டைத்தான் நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘போயஸ் கார்டன் வீடு, சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் இணைக்கப்பட்டுள்ளதா?, அந்த சொத்தின் தற்போதைய நிலவரம் என்ன? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்