கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல்: நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களுடைய மூத்த மகன் என்றும்,

Update: 2017-09-04 22:15 GMT
கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல்: நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரை,

தனுஷ் தங்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது நடிகர் தனுஷ் ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார். பல கட்ட விசாரணைக்குப்பின் மேலூர் கோர்ட்டில் தனுஷ் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கதிரேசன், மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘தனுஷ் வழக்கில் மேலூர் கோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வக்காலத்தில் தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பள்ளி சான்றிதழ், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவை போலியானது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தனுஷ் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து கோர்ட்டை தவறாக வழிநடத்தி நிவாரணம் பெற்றுள்ளனர். எனவே போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்