நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-09-04 06:44 GMT
சென்னை,

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பில், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்று கூறி தி.முக. தரப்பில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தி.மு.க.வின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேநேரம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ,தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு உட்பட்டு வெளியிடப்பட வில்லை என்று கூறி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது.

தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பில், ‘குற்றப் பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்றும் வேட்பு மனுவில் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளதால், இது தொடர்பான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். அதன்பின்னர் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பது குறித்து ரகசிய அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, மாநில தேர்தல் ஆணையமும் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நவம்பர் 17 ஆம் தேதிக்குள்  உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்