தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர்.
இதனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் கவர்னரை சந்தித்து, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தன்னை சந்திக்க வந்த எதிர்க்கட்சி தலைவர்களிடம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தான் கருதவில்லை என்றும் பந்து என் கோர்ட்டில் இல்லை எனவும் கவர்னர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நலன்களைக் காப்பாற்றுவதற்கு, தன்னிடம் உள்ள பந்தை பயன்படுத்த தி.மு.க. எள் முனையளவும் தயங்காது என்று அறிக்கை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. கவர்னரின் நடவடிக்கை குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர். இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக நேற்று தகவல் பரவியது. ஆனால் இதை திட்டவட்டமாக தி.மு.க. மறுத்தது.
மாற்றம்தான் வேண்டும்
இதுபற்றி தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளரும், டெல்லி மேல்-சபை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே? என்று ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய போவதாக வரும் தகவல் தவறானது. இது குறித்து தி.மு.க. எந்த முடிவையும் எடுக்கவில்லை. ராஜினாமா செய்ய மாட்டோம். ராஜினாமா முடிவு முறையாகவும் இருக்காது. ஒருவேளை 89 பேரும் ராஜினாமா செய்தால் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் வருமே தவிர, மாற்றம் வராது. மாற்றம் வர வேண்டும் என்பது தான் தி.மு.க. உள்ளிட்ட எல்லோருடைய விருப்பமும். மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். கவர்னர் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டி வருவதால் ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்கிறோம்.
போராடுவோம்
ஜனநாயக வழியில் தி.மு.க. தன்னுடைய கடமையை செய்யும். எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார். கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் அழுத்தம் கொடுக்க கூறினார். அதை நாங்கள் செய்தோம். அரசியல் நிலவரத்தை உற்று நோக்கி வருகிறோம். அடுத்த கட்டமாக ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.