நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு
பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்
பூலித்தேவன் பிறந்தநாள் விழா
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமுதாய தலைவர்கள் ஏராளமானோர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டிருந்தனர்.
மாலை 3 மணி அளவில் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்தார். அங்குள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் தனது காரில் வந்து ஏறினார்.
அப்போது தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவர் தலைமையில் ஏராளமானோர் அங்கு வந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
கருணாஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு
அப்போது தேவர் பேரவையை சேர்ந்தவர்கள், நடிகர் கருணாஸ் கார் மீது கைகளால் ஓங்கி அடித்தனர். தொடர்ந்து காரின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு பதற்றம் உருவானது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அப்போது பதிலுக்கு கருணாஸ் ஆதரவாளர்கள், தேவர் பேரவையை சேர்ந்த முத்தையா தேவரின் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்றார்.
4 பேர் கைது
இச்சம்பவத்தையொட்டி அங்கு மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாதவண்ணம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கார் கண்ணாடி உடைப்பு தொடர்பாக நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த ராஜ்குமார், குருக்கள்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன், புளியங்குடியை சேர்ந்த சுரேஷ், வாசுதேவநல்லூரை சேர்ந்த கணேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.