மக்களிடம் பிரதமர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்

பண மதிப்பு இழத்தல் நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மக்களிடம் பிரதமர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-08-31 19:15 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியாக அறிவிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 தாள்கள் மதிப்பு இழப்பு நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை. பணமதிப்பு இழக்கப்பட்ட தொகையில் 99 சதவீதம் தொகை தங்களிடம் திரும்பிவந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

புழக்கத்தில் இருந்த தொகையில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே திரும்பி வரவில்லை. அதில் திரும்பி வராத ரூ.1000 தாள்களின் மதிப்பு ரூ.8900 கோடியாகும். மீதமுள்ள தொகை ரூ.500 தாள்கள் ஆகும்.

பண மதிப்பு இழத்தல் நடவடிக்கையின் முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களாகியும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கூட, மதிப்பு இழக்க வைக்கப்பட்ட ரூபாய் தாள்களை எண்ணும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கவர்னர் தப்பிக்க முயன்றார். அப்போதே இத்திட்டம் தோல்வியடைந்து விட்டதையும், அதை சமாளிப்பதற்கான காரணங்களை மத்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிந்தது.

மொத்தத்தில் பண மதிப்பு இழத்தல் நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிப்பு உள்ளிட்ட எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக இந்தியாவை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திரமோடி, இருண்ட காலத்திற்கு அழைத்துச் சென்றது உறுதியாகிவிட்டது. எனவே, இனியும் அலங்கார வார்த்தைகளைப் போட்டு சமாளிப்பதற்கு பதிலாக பணமதிப்பு இழத்தல் நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மக்களிடம் பிரதமர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்