கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ்
கோவையில் ரூ.1,500 கோடியில் ஸ்மார்ட் நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கோவையில் ரூ.1,500 கோடியில் ஸ்மார்ட் நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 28 வயதான அவர் பொறியியல் பட்டமும் (பி.இ.), வணிக நிர்வாகவியலில் (எம்.பி.ஏ.) முதுநிலைப்பட்டமும் பெற்றிருக்கிறார். இதைத்தவிர வேறு பணி அனுபவமோ, நிரூபிக்கப்பட்ட செயல்திறனோ அவருக்கு இல்லை.
அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜூவின் மகள் என்பது தான்.
தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்திருந்த 21 பேரில் தகுதியான வேறு எவரும் இல்லாததால் சுகன்யா தேர்வு செய்யப்பட்டதாக கோவை மாநகராட்சி கமிஷனர் அளித்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது.
எனவே, கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுகன்யா நியமிக்கப்பட்டதை அரசு ரத்து செய்ய வேண்டும். மீதமுள்ள ஸ்மார்ட் நகரங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள் நேர்காணலை சமூக ஆர்வலர்களை, பார்வையாளராக நியமித்து வெளிப்படையாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.