எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை: மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள்

எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை என்றும், மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக துடிப்பதை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2017-08-15 22:15 GMT

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலில் நேற்று நடந்த பொது விருந்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் தளைக்க வேண்டும் என்பது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு. அந்த கனவை சிதைக்கின்ற வகையில் யார் நடவடிக்கை எடுத்தாலும், புறம்பாக செயல்பட்டாலும், சதி செய்தாலும், துரோகம் செய்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றிலே எட்டப்பர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். 2021–ம் ஆண்டு தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் அங்கலாய்த்து கொண்டு இருக்கிறார்.

அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் சச்சரவுகளுக்குள்ளே எப்படியாவது ஆதாயம் தேடலாம் என்றும், அதன் மூலம் குறுக்கு வழியிலே ஆட்சியை பிடித்துவிடலாம் என்றும் அவர் கனவு காண்கிறார். அந்த கனவு ஒரு போதும் நனவாக போவது கிடையாது. அப்படி எதிரிகள் நினைக்கின்ற எண்ணத்துக்கு நிச்சயமாக அன்பு சகோதரர்கள் துணை போக மாட்டார்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– இரு அணிகள் இணைப்பு தொடர்பான நடவடிக்கைக்கு ஏன் காலதாமதம் ஆகிறது?.

பதில்:– இரு அணிகள் இணைப்பு என்பது ஒரு செயல் வடிவம் பெற்று இருக்கிறது. முழுமையான நிலையை எட்டும் அளவுக்கு என்ன வி‌ஷயங்கள் இருக்கிறது என்று நான் ஒருவன் மட்டும் சொல்ல முடியாது. இரு அணிகள் இணைகின்ற சூழ்நிலையில் அந்த தகவல் தெரிவிக்கப்படும். விரைவில் அணிகள் இணையும்.

கேள்வி:– நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. அரசு எந்த வகையில் கையாளும்?.

பதில்:– சோதனைகளை தாங்கி சாதனைகளை பெற்ற இயக்கம் அ.தி.மு.க., எனவே எந்த சோதனைகளை கண்டும் அஞ்சப்போவது இல்லை.

சோதனைகளின்போதுதான் அ.தி.மு.க. தங்கம் போல மினுங்கும். ஸ்டாலின் நப்பாசையில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார். அவரின் எண்ணம் மக்கள் விரோத எண்ணம். முதல்–அமைச்சராக வேண்டும் என்று அவர் துடிக்கிறார். அந்த துடிப்பை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள். ஏனென்றால், தற்போதுள்ள அரசு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த வித தொய்வும் இன்றி, குறைவுமின்றி ஜெயலலிதாவின் கனவுகள், எண்ணங்கள், லட்சியங்களை நிறைவேற்றும் அரசாக சென்று கொண்டு இருக்கிறது. மக்கள் இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

ஸ்டாலின் எதிர்பார்க்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் வராது. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சில பேர், தேவைப்பட்டால் ஆதரவு அளிப்பதாக கூறி இருப்பது, அ.தி.மு.க. தொண்டர்களை நொந்து போக வைத்து இருக்கிறது. காலம் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டும்.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்