சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா; எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்
சென்னை கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார்.
சென்னை,
வீர, தீர செயல்களை புரிந்தவர்களுக்கு விருதுகளையும் அவர் வழங்குகிறார்.
தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணி அளவில் புறப்படுகிறார். கோட்டைக்கு வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்கிறார். அங்கு போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும், நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காவல் துறையினர் அழைத்து வருகிறார்கள். அவரை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார்.
அங்கிருக்கும் தலைமை ராணுவப்படை தலைவர், கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைதள அதிகாரி, கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மரபுப்படி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகம் செய்து வைப்பார்.
அதன்பிறகு அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார்.
அதை தொடர்ந்து காலை 8.17 மணிக்கு திறந்த ஜீப்பில் ஏறி சென்று, போலீஸ் அணிவகுப்பை அவர் பார்வையிடுவார். அவருடன் ஜீப்பில் அணிவகுப்பு தலைவர் செல்வார்.
பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்கு 8.30 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி, சல்யூட் அடித்து வணக்கம் செலுத்துகிறார்.
அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை நிகழ்த்துவார். சுமார் 10 நிமிடங்கள் அவரது உரை நீடிக்கும் என்று தெரிகிறது. அவர், தனது உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
அதை தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.