மாணவர்களின் நலன் கருதி ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து உடனே பேசுங்கள்

மாணவர்களின் நலன் கருதி, ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து உடனே பேசுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

Update: 2017-08-13 22:15 GMT
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து கருத்துகள் வெளியிட்டு வருகிறார். அரசு துறைகளில் ஊழல் நடப்பதாக விமர்சித்ததால் அமைச்சர்கள் எதிர்ப்புகளுக்கும் ஆளானார்.

ஊழல் ஆதாரங்களை திரட்டி ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சத்துணவு முட்டையில் நடந்த ஊழலை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டார். தற்போது ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்தியது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கியதால் விலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால், அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கு மட்டும் ஒரு ஆண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். இதை தொடர்ந்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க அவசர சட்டம் கொண்டுவர அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக ‘நீட்’ தேர்வு விவகாரம் குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட கருத்து வருமாறு:-

“நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர்கள் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்”.  இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்