காவிரி டெல்டா மாவட்டங்களில் 29-ந் தேதி முழு அடைப்பு போராட்டம்
29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
தஞ்சாவூர்,
கடலூர்-நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வருகிற 29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
கடலூர்-நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சந்திப்பு விழிப்புணர்வு பிரசாரம் கடந்த 7-ந்தேதி திருவாரூரில் தொடங்கியது.
இந்த பிரசாரம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் வழியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் நிறைவடைந்தது. அப்போது பி.ஆர்.பாண்டியனிடம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர்-நாகை மாவட்டங்களை பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதாவது 2 மாவட்டங்களில் உள்ள 47 கிராமங்களில் உள்ள 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்படும். இந்த கிராமங்களில் மக்கள் வாழ முடியாது. மேலும் மீன் வளமும் குறைந்துவிடும். மீனவர்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவார்கள்.
பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்ததை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெறக்கோரியும், பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் வருகிற 29-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிகர்களை சந்தித்து பேச உள்ளோம். மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதற்கு ஆதரவு கேட்டு அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.