ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ந்தேதி நடைபெறும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மழையால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ந்தேதி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி. தினகரனும் ஒருவரை ஒருவர் 420 (மோசடி பேர்வழி) என்று வசை பாடி, மாறி மாறி குற்றம்சாட்டி வருகிறார்களே?
பதில்:- அவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகளுக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை. அவை எல்லாம் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் நடக்கும் தகராறுகளை வேடிக்கை பார்க்கவோ, அவற்றில் தலையிடவோ நாங்கள் விரும்பவில்லை.
கேள்வி:- அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் என நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் எழுதப்பட்டு இருக்கிறதே?
பதில்:- அ.தி.மு.க. பிளவுக்கு பா.ஜ.க. காரணமா, இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. அதுபற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நீட் பிரச்சினை, இந்தித்திணிப்பு போன்ற பல பிரச்சினைகளில் அ.தி.மு.க. அடிபணிந்து போவதற்கு பா.ஜ.க. தான் காரணம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- அமைச்சர்கள் ஊழல் செய்வதாக நீங்கள் சொல்லி வருகிறீர்கள். இப்போது டி.டி.வி. தினகரன் அமைச்சர்கள் சுருட்டப் பார்க்கிறார் கள் என்று தெரிவித்து இருப்பதோடு, 3 அணிகளும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்களே?
பதில்:- ஒவ்வொரு அணியும் அடுத்தவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.
கேள்வி:- பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆட்சி நீடிக்குமா?
பதில்:- தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோதும், தேவைப்பட்டால் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தேன். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் அரசு மீது நாங்கள் நம்பிக்கைத் தீர்மானமே கொண்டு வரவில்லை. சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
குதிரை பேர அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, கவர்னர் உத்திரவின் அடிப்படையில் அது நடைபெற்றது. தி.மு.க. சார்பில் கொண்டு வரப்படவில்லை. எனவே, இதைக்கூட முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ளவில்லையே என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று வருகின்றபோது, அந்தநேரத்தில் இருக்கக்கூடிய சூழலைப் பொறுத்து, தி.மு.க. ஒரு நல்ல முடிவை எடுக்கும்.
கேள்வி:- சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் ஏரியைப் பார்வையிட அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
பதில்:- எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எனக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. எனவே, அந்த உரிமையின் அடிப்படையில் என்னை அங்கு செல்ல விடாமல் தடுக்க முடியாது என்று இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. எனவே, விரைவில் அங்கு இருக்கும் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துப்பேசி, ஒரு தேதியை முடிவு செய்து அறிவித்து, எடப்பாடி தொகுதியில் இருக்கக்கூடிய அந்த ஏரியை மட்டுமல்ல, தமிழகத்தில் தி.மு.க.வினர் தூர்வாரியுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் நிச்சயமாக நேரடியாகச் சென்று பார்வையிடுவேன்.
கேள்வி:- ஒத்திவைக்கப்பட்டுள்ள முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் எப்போது நடைபெறும்?
பதில்:- முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் 5-ந்தேதி அந்தப்பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.