நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை நீடிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நாட்டு நாய்கள் இனவிருத்தி மையத்தை மூடும் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2017-08-11 22:45 GMT

புதுடெல்லி,

சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழகத்தின் பூர்வீக நாய்களின் இனத்தை பாதுகாக்கவும், அந்த நாய்களின் இனத்தை பெருக்கவும் சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இனவிருத்தி மையத்தை 1980–ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடைத்துறை தொடங்கியது.

இந்த மையத்தை கடந்த 2013–ம் ஆண்டு ஆய்வு செய்த இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், இந்த மையம் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை, விதிமுறைகளை பின்பற்றி நாய்களை பராமரிக்கவில்லை என்றும் கூறி மையத்தை இழுத்து மூட உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த மையத்தை மூடிவிட்டு அங்குள்ள நாய்களை சிகிச்சைக்காக தங்கள் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி பீட்டா என்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 2 மாதங்களுக்குள் சைதாப்பேட்டையில் உள்ள நாய்கள் இனவிருத்தி மையத்தை அரசு மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 13–ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு, விளக்கம் கோரி பீட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், பீட்டா அமைப்பினர் மிகவும் தாமதமாக பதில் மனுவை தாக்கல் செய்ததால் அதனை படிக்க போதிய அவகாசம் கிட்டவில்லை என்றும், எனவே எதிர் பதில்மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்