நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 40.86 அடியாக உயர்வு
நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 40.86 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு சில தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், அவ்வப்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடிக்குமேல் அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து சற்று அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
அதாவது, கடந்த 9-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 63 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 7 ஆயிரத்து 150 கனஅடியாக அதிகரித்தது. இது மேலும் அதிகரித்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 249 கனஅடியாக வந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 40.76 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 40.86 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.