தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ‘தேவைப்பட்டால் கொண்டுவருவோம்’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ‘தேவைப்பட்டால் கொண்டுவருவோம்’ என்ம .க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2017-08-12 00:15 GMT
சென்னை,

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். இந்த அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அ.தி.மு.க. அம்மா அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக உள்ளனர். டி.டி.வி. தினகரனை கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன், தன்னை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை நீக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்றும் கூறி இருக்கிறார். பதவியில் இருக்கும் வரை சுருட்ட பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அத்துடன், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி இருக்கும் அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பினால், அவரது அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் இனிவரும் நாட்களில் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நேற்று காலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக உணர்கிறீர்களா?

பதில்:- தமிழகத்தில் நிச்சயம் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. ஆளும் அ.தி. மு.க. அரசு 3 அணிகளாக பிரிந்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் படுமா?

பதில்:- தேவைப்பட்டால் கொண்டுவருவோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில் சபாநாயகர் நீங்கலாக அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு 123 எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு 11 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 89 எம்.எல்.ஏ.க்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.

அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் எல்.எல்.ஏ.க்களும் அடங்குவார்கள்.

மேலும் செய்திகள்