மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் ஜி.கே.வாசன் விருப்பம்

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பெரிதாக நீடிக்கிறது. மேலும் ஆளும் கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது.

Update: 2017-08-11 17:28 GMT
சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் பெரிதாக நீடிக்கிறது. மேலும் ஆளும் கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் ஆட்சியின் நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைபெற வேண்டிய அன்றாட, அத்தியாவசியப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு மக்களுக்கான பணிகள் முடங்கிப்போயுள்ளது.

எனவே இத்தகைய சூழலில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால் உட்கட்சியின் கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளும் ஆட்சியும், கட்சியும் முன்வர வேண்டும். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்கள் நலன் காக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்களும், ஆளும் கட்சியும் உணர்ந்து அதற்கேற்ப ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

முக்கியமாக தமிழக அரசு தமிழக மாணவர்கள் பிரச்சினையான நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கும் – இல்லையென்றால் 85 சதவீத உள் ஒதுக்கீடாவது பெறுவதற்கும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் மத்திய அரசை வலியுறுத்தி நல்ல முடிவு காண ஆட்சியும், கட்சியும் ஒன்றுபட்டு வழி வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்