‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி சென்னையில், சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வைகோ உள்பட ம.தி.மு.க.வினர் கைதாகி விடுதலை

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குக்கோரி, சென்னையில் சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிட சென்ற வைகோ உள்பட ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-08-10 21:30 GMT
சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர், மாணவர் அணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தேர்தல் பிரிவு செயலாளர் கழககுமார், சிறுபான்மைப்பிரிவு செயலாளர் முராத்புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் எம்.ஈ.நாசர், தென்றல் நிசார் உள்பட 300–க்கும் மேற்பட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள்–தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:–

மத்திய அரசு தொடர்ந்து தனது ‘இந்துத்துவா’ கொள்கையை தமிழகத்தில் திணிப்பதிலேயே குறியாக உள்ளது. ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா என்ன ஆனது? என்று தெரியவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதில் இருந்தே, மத்திய அரசின் மெத்தன போக்கு தெளிவாக தெரிகிறது.

தமிழக அரசு போலீசாரை தவறாக பயன்படுத்தி வருகிறது. நான் எதற்கும் பயப்படாதவன். ‘மிசா’, ‘தடா’, ‘பொடா’ என பலவற்றை பார்த்தவன். ஒரு நல்ல அரசு மக்களுக்கு நல்லதை செய்துதர வேண்டும். துணிவான அரசு என்றால், நீட் தேர்வில் விலக்கு பெற்றபிறகு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். அதனை செய்ய அரசுக்கு துணிவில்லை. மோடி–எடப்பாடி பழனிசாமி இடையே நிலவும் புன்சிரிப்பு காட்சி அவமானம் என்பது புரியவேண்டும். என் மனது எரிமலையாக குமுறுகிறது. நல்ல தீர்வு எட்டப்படாத வரை நான் ஓயப்போவது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு மூலம் எதிர்கால பாதிப்பு குறித்து, மாணவர்கள் உள்ளத்தில் நான் நெருப்பை மூட்டுவேன். எப்படி கல்லூரி–விடுதிகளில் ஏதாவது பிரச்சினை என்றால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அதுபோல இந்த விவகாரத்திலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலத்துக்கு உலைவைக்கும் ‘நீட்’ தேர்வை நடத்த அனுமதிக்கக்கூடாது. மாநில அரசின் உரிமைகளுக்குட்பட்டே இதுவரை நடந்தது போல மருத்துவம்–பொறியியல் துறையில் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிட வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வினர் சென்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ம.தி.மு.க. தொண்டர்கள் சிலர் ‘நீட்’ அரக்கன் உருவபொம்மையை எரித்தனர். இதையடுத்து அவர்களை அடக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமானார்கள். இதனைத்தொடர்ந்து போலீசாருடன் வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும், மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்ததற்காகவும் வைகோ உள்பட 300–க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து ராயபுரத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்