தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் பேட்டி

தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2017-08-09 22:45 GMT
சென்னை,

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் விவசாயத்திற்கு மட்டும் அல்ல குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை பெய்யாதா? என்று பொதுமக்கள் ஏங்கி தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது;-

தென் இந்தியாவில் வெளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று வலுப்பெற்றுள்ளது. இதன் காரணத்தாலும் லட்சத்தீவு அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலும், அதிராம்பட்டினத்திலும் அதிகபட்சமாக தலா 13 செ.மீ. மழை பெய்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தென் மாவட்டத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழகத்தில் நாளை மழை குறைந்து 12-ந் தேதி முதல் 4 அல்லது 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும்.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி வரைக்கும் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 135.8 மில்லி மீட்டர். ஆனால் இந்த வருடம் பெய்த மழை அளவு 138.5 மில்லி மீட்டர். அதாவது அதிகமாக பெய்துள்ளது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்