ஊழல் கண்காணிப்பு துறை ஆணையர் நியமனத்தை எதிர்த்து தி.மு.க. வழக்கு
ஊழல் கண்காணிப்பு துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடியை நியமித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழக ஊழல் கண்காணிப்பு துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடியை நியமித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2–ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவு சட்டவிரோதமானது ஆகும். தலைமை செயலாளர், பிற துறைகளின் முதன்மை செயலாளர்கள் ஆகியோருக்கு கீழ் நிலை அதிகாரியாக வி.கே.ஜெயக்கொடி உள்ளார். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிரான பெரிய அளவிலான ஊழல் புகார்களை, இவரால் விசாரிக்க முடியாது.
மேலும், மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையரை மாற்றும் அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. அவரை எந்த நேரத்திலும் அரசால் மாற்ற இயலும். அதனால், அவர் சுதந்திரமாகவும், அச்சமின்றியும், சார்புத்தன்மை இல்லாமலும் செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயக்கொடியை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்.விதிமுறைகளின்படி மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக தகுதியான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கவும், ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்படுபவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் வேறு எந்த பணியையும் அரசு வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது தன்னிச்சையாக செயல்படும் விதமாகவும், ஏற்கனவே இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றியும், தகுந்த அதிகாரியை ஆணையராக நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்கொடியின் அனுபவம், தகுதி ஆகியவற்றை முறையாகப் பரிசீலித்த பிறகே இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 1–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.