சென்னை கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பார்த்தனர்

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர்.

Update: 2017-08-07 22:15 GMT

சென்னை,

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரிய ஒளி கதிர்கள் சந்திரனை சென்று அடையாமல் பூமி மறைப்பதால், சந்திரன் இருளாக காட்சி அளிப்பதை சந்திர கிரகணம் என்கிறோம். பவுர்ணமி நாளில்தான் சந்திரகிரகணம் ஏற்படும்.

அதன்படி நேற்று சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் பகுதி சந்திர கிரகணத்தை காண முடிந்தது.

தமிழ்நாட்டில் பகுதி சந்திர கிரகணம் தெரிந்தது. சென்னையில் இரவு 10.52 மணிக்கு தொடங்கிய கிரகணம் 12.48 மணி வரை நீடித்தது.

சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திரகிரகணம் தெளிவாக தெரியவில்லை.

சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 நவீன தொலைநோக்கிகள் மூலம் சந்திர கிரகணத்தை பார்த்தனர். சந்திர கிரகணம் குறித்து அவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் விஞ்ஞானி அய்யம்பெருமாள் கூறுகையில், இதற்கு முன்பு கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் 4–ந் தேதி சந்திர கிரகணம் ஏற்பட்டதாகவும், அடுத்த சந்திர கிரகணம் 2018–ம் ஆண்டு ஜனவரி 31–ந் தேதி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்