போலியாக கூடுதல் ஜி.எஸ்.டி. வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

போலியாக கூடுதல் ஜி.எஸ்.டி. வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-06 22:15 GMT

சென்னை,

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரியின் 20–வது கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழகத்தில் உள்ள வணிகர்கள், வர்த்தக பிரமுகர்கள், சிறு வியாபாரிகள், குறு, சிறு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 57 வகையான கோரிக்கைகள் வழங்கப்பட்டன. இவற்றை சரக்கு, சேவை வரி கூட்டத்தில் வழங்கி வலியுறுத்தப்பட்டது.

துணிகள் மீதான ‘ஜாப்’ வேலைக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. நியாயத்தன்மையை உணர்ந்து வணிகர்கள் தருகின்ற கோரிக்கைளை வலியுறுத்துவதன் மூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் நல்ல தீர்வு காணப்படும். சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிக்க நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ஆதாயங்கள் மக்களுக்கு சென்றடையாமல், தவறான வரியை வசூலித்து கொள்ளை லாபம் எடுத்தால் சட்டவிரோதமாக கருதப்படும். மாநில அரசுகள் தரும் புகார்களின் அடிப்படையில் நிலைக்குழு விசாரித்து உரிய தண்டனையை வழங்கும். நிர்ணயம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி.யை தான் வசூலிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.யை காரணம் காட்டி போலியான பில்களை போட்டு மக்களிடத்தில் கூடுதலாக வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலைக்குழு தலைவரை விரைவில் மத்திய அரசு நியமிக்கும். விசைத்தறி, கைத்தறி தொழில் நலிவடையாமல் இருக்க வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பட்டாசு, தீப்பெட்டி, ஓட்டல்கள் உள்பட 57 பொருட்களில் வரிவிலக்கு மற்றும் வரி குறைப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் சரக்கு மற்றும் சேவை வரி கூட்டம் நடக்கிறது. அப்போதும் வலியுறுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்