பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறை செயலாளர்களை மாற்றக்கூடாது

தமிழக அரசின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்களை மாற்றக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-08-06 17:38 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக்கல்வித்துறையில் உதயச்சந்திரன் செயலாளராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டதற்கு பிறகு தான் அத்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11–ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயச்சந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள்.

உதயச்சந்திரன் பொறுப்பேற்று சரியாக 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பது தான்.

அதேபோல் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் இடமாற்ற ஆணை தயாராகி வருகிறது. அவர் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கோடிகளை கொட்டிக்கொடுத்து துணைவேந்தரான பலரும் இந்த நடவடிக்கையால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமே என்ற அச்சத்தில் பாலிவாலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும், அதை பினாமி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, கல்வித்துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்