திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; பெண் கைது

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-08-03 21:15 GMT
திருவள்ளூர்,

சென்னை வடபழனி, அழகர்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி நிலவழகி (வயது 30). இவர் வேலை தேடி வந்தார். இதை அறிந்த திருவள்ளூரை அடுத்த கீழானூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிலவழகியின் உறவினரான கீதா(37) என்பவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அங்கு வேலை வாங்கித்தர ரூ.6 லட்சம் தேவைப்படும் என அவர் கூறினார். அதற்கு நிலவழகி தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றார். இதைத்தொடர்ந்து கீதா அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகையை 2015-ம் ஆண்டு வாங்கிச் சென்றார். ஆனால் அவர் இதுநாள் வரையிலும் வேலை வாங்கித்தராமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். நிலவழகி பலமுறை அவரை தொடர்பு கொண்டும் சரியான பதில் கூறாமல் கீதா பல்வேறு காரணங்களை கூறி வந்தார்.

கடன் வாங்கி மோசடி

இதனால் நிலவழகி தனக்கு வேலை வாங்கித் தரும்படியும், இல்லையெனில் தனது நகையை திருப்பித் தரும்படியும் கேட்டார். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

இதற்கிடையே திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகில் வசிக்கும் லதா(37) என்பவரிடம் கீதா தனது 2 பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். அந்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் கீதா காலதாமதம் செய்து வந்தார்.

சிறையில் அடைப்பு

பாதிக்கப்பட்ட நிலவழகி, லதா ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இது சம்பந்தமாக மனு அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபிச்சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஞானவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், மகேஸ்வரி, மனோகரன், ராஜேந்திரன், ஸ்டெல்லாமேரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் தனது உறவினர் வீட்டில் இருந்த கீதாவை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்