விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம் எதிரொலி: புதுக்கோட்டை பத்திரப்பதிவு பெண் அதிகாரி திடீர் மாற்றம்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பெண் அதிகாரி திடீர் என்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2017-08-02 22:30 GMT
புதுக்கோட்டை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார் வந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் நிர்வாகிகள் பட்டியலுடன் சிக்கியது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளருக்கு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியிருந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளர் சசிகலா விசாரணை மேற்கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியும், புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலமும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறை பதிவாளராக இருந்த சசிகலா திடீரென நேற்று விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்ததற்காக இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்