பலத்த மழை காரணமாக பாலாற்றில் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணைகள் நிரம்பின தமிழகத்துக்கு நீர்வரத்து இல்லை

பலத்த மழை காரணமாக பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு கட்டிய 22 தடுப்பணைகள் நிரம்பியது.

Update: 2017-08-01 22:15 GMT
வாணியம்பாடி,

பலத்த மழை காரணமாக பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு கட்டிய 22 தடுப்பணைகள் நிரம்பியது. இருப்பினும் தமிழகத்துக்கு நீர்வரத்து இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் பாலாற்று நீரை ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டி தடுத்துள்ளது. இதனால் பாலாறு எப்போதும் வறண்டே காணப்படுகிறது. மேலும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தீர்வுகாண ஹந்திரி - நீவா திட்டக்கால்வாயை குப்பம் வரை நீடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இதன்மூலம் கர்நாடகத்தில் இருந்து ஆந்திராவுக்குள் நுழையும் பாலாற்று நீர் ஆந்திர மாநிலத்தை விட்டு வெளியேறாத வகையில் புதிதாக மேலும் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், குப்பத்தில் தொடங்கி வாணியம்பாடியை அடுத்த தமிழக எல்லையில் உள்ள புல்லூர் வரை உள்ள 22 தடுப்பணைகளின் உயரம் 5 அடி இருந்தது. இதில் புல்லூர் தடுப்பணை 12 அடியாகவும் மற்ற தடுப்பணைகள் 18 அடி வரையும் உயர்த்தப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தமிழக-ஆந்திர எல்லையில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணை உள்பட 22 தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது. ஆனால் தமிழக பாலாற்றில் தண்ணீர் வரவில்லை.

புல்லூர் தடுப்பணையில் நிரம்பி வழியும் சிறிதளவு உபரி நீர் மட்டுமே தமிழக பாலாற்றில் வழிந்தோடுகிறது. நீர்வரத்து இல்லாததால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிவதால் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்