கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடக்கவில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கூட்டுறவு வங்கிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-31 22:00 GMT
சென்னை,

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.467 கோடி அளவிற்கு பழைய நோட்டுகள் ‘டெபாசிட்’ செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

அரசியல்வாதிகளும் விதிகளுக்கு புறம்பாக கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ‘டெபாசிட்’ செய்ததாக வருமானவரி துறை தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கூட்டுறவு வங்கிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. குறிப்பாக பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது கூட்டுறவு வங்கிகளில் விதிகளுக்கு புறம்பாக விவசாயிகளின் கணக்குகளில் பணம் ‘டெபாசிட்’ செய்யப்படவில்லை.

அதேபோல் அரசியல்வாதிகளும் கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யவில்லை. ஆதாரம் இல்லாமல் அரசியல் ஆதாயத்துக்காக சிலர் குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் அனைத்து கணக்குகளையும் தணிக்கை செய்தனர். ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள், வருமான வரித்துறை, நபார்டு வங்கி, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், அனைத்து வங்கிகளிலும் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி உள்ளனர்.

இதனையடுத்து கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து ரூ.467 கோடியை ரிசர்வ் வங்கி வரவு வைத்துவிட்டு அதற்கான சான்றிதழை வழங்கி உள்ளது. எனவே இது அரசியல் காரணங்களுக்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளே தவிர, இதில் வேறு எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

கூட்டுறவு வங்கி மூலம் நடப்பு ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி நிவாரண உதவி, கடன் தள்ளுபடி போன்ற அரசின் திட்டங்களை விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கிகள் திறம்பட எடுத்து செல்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்