கேமரா, செல்போனுக்கு அப்துல்கலாம் மணிமண்டபத்தில் திடீர் தடை

அப்துல்கலாம் மணிமண்டபத்துக்குள் கேமரா, செல்போன் கொண்டு செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-07-31 22:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மத்திய அரசின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 27-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.

இங்கு அப்துல்கலாம் சிலைகள் மற்றும் அவரது பல்வேறு சாதனைகள் அடங்கிய பொருட்கள், அவர் படித்த ஏராளமான புத்தகங்கள் என பல்வேறு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மிகுந்த ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு தங்களது செல்போன்களில் படமும் எடுத்து சென்றனர்.

மணிமண்டபத்தில் கலாம் வீணை வாசிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள சிலை அருகே பகவத்கீதை புத்தகம் மட்டுமே இடம் பெற்று இருந்தது சர்ச்சையை கிளப்பியது.

அதை தொடர்ந்து பகவத்கீதை அருகே குரான், பைபிள் ஆகியவை நேற்று முன்தினம் வைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே பாதுகாப்பு கருதி பைபிள், குரான் ஆகிய 2 புத்தகங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு சிலை அருகே உள்ள கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மணிமண்டபத்தை காண வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று திடீரென பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். மணிமண்டபத்தினுள் செல்போன், கேமரா கொண்டு செல்லக்கூடாது எனவும், உள் பகுதியில் யாரும் படம் பிடிக்கக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் பிடிக்க அதிகாரிகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், மூடப் பட்டுள்ள முக்கிய நுழைவு வாயிலை திறக்க வேண்டும் என்று மணிமண்டபத்தை காணவந்த அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்