போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான லஞ்ச புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2017-07-31 21:30 GMT
சென்னை,

குட்கா, பான்மசாலாவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் உணவு பொருட்கள் அல்ல என்றும், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் இவற்றின் விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு கடந்த 2012–ம் ஆண்டு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, தமிழகத்திலும் கடந்த 2013–ம் ஆண்டு இந்த புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பான அரசிதழ் 2 ஆண்டுகள் கழித்து கடந்த 2015–ம் ஆண்டுதான் முறைப்படி வெளியிடப்பட்டது.

அதன்படி, அந்த பொருட்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. ஆனால், தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த குட்கா, பான்மசாலா விற்பனை செய்யும் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, ரூ.250 கோடி அளவுக்கு தமிழகத்தில் இந்த பொருட்களை விற்பனை செய்திருப்பதும், இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்பட பல போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள், விரிவான கடிதங்களை எழுதியுள்ளனர். ஆனால், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, லஞ்சம் தொடர்பாக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘குட்கா, பான்மசாலாவை சட்டவிரோதமாக தமிழகத்தில் விற்பனை செய்ய மத்திய கலால்வரித்துறை அதிகாரிகள், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த லஞ்சம் தொடர்பான வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால், அது சரிப்பட்டு வராது. மத்திய அரசு அதிகாரிகளும், இந்த லஞ்ச விவகாரத்தில் சிக்கியுள்ளதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் அது சரியாக இருக்கும்’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். அப்போது அரசு வக்கீல், ‘அட்வகேட் ஜெனரல் இந்த வழக்கில் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், அட்வகேட் ஜெனரல் கோர்ட்டில் ஆஜராகி, ‘ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்டது. மேலும், இந்த புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது’ என்றார்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘டி.ஜி.பி., ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து அந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. மேலும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் குறித்து கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய தலைமை செயலாளரிடம், வருமான வரித்துறை தலைமை அதிகாரி கடிதமும், ஆதார ஆவணங்களும் கொடுத்துள்ளார். ஆனால், தற்போது அந்த ஆவணங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கை செப்டம்பர் 11–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள், சி.பி.ஐ. இயக்குனர், விஜிலென்ஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீசு அனுப்புகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்