ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்கவில்லை
பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3½ லட்சம் வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை மற்றும் இழப்பீடாக ரூ.3½ லட்சம் வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் சுந்தரசெல்வன். டென்னிஸ் பயிற்சியாளர். இவர், சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–நான், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பெற முடியும்.
கடந்த 2014–ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்டேன். இதைதொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 லட்சம் செலவானது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை வழங்க மறுத்துவிட்டது.
காரணம் கேட்டபோது, எனக்கு இருதய பாதிப்பு 15 ஆண்டுகளாக இருந்து வருவதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு முன்பே இருதய நோய் இருந்ததால் காப்பீடு பெற தகுதியில்லை என்றும் கூறியது.ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனவே, எனக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு ஆகும்.எனவே, மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.