அக்காவுக்கு இறைச்சி சமைத்து கொடுக்க மறுத்த மனைவியை கொன்று டிபன் கடைக்காரர் தற்கொலை

அக்காவுக்கு இறைச்சி சமைத்து கொடுக்க மறுத்ததால் குடிபோதையில் டிபன் கடைக்காரர் தனது மனைவியை கொன்று விட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2017-07-17 22:02 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு 14-வது பிளாக்கில் வசித்து வந்தவர் மோகன் (வயது 33). இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு மகாலட்சுமி (9), அணு (8), காவ்யா (7) என 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

மோகன் அவரது வீட்டின் எதிரே தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. மோகனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரது அக்கா தேவி வந்தார்.

மோகன் தனது மனைவியிடம் “அக்கா வந்திருப்பதால் ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து கொடு” என்று கூறினார்.

அதற்கு சரளா சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்து அழித்துவிட்டு, “செலவுக்கு பணம் கொடுக்காத உனக்கு இறைச்சி சமைத்து தர முடியாது” என்று மறுத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதன்பின்பு தேவி அவரது வீட்டுக்கு திரும்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது “எனது அக்காவுக்கு இறைச்சி சமைத்து போட மறுத்து விட்டாயே” எனக்கூறி தூங்கிக் கொண்டிருந்த மனைவி சரளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்பு நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் ஒன்றும் நடக்காதது போல் தெரிவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால் இந்த கொலை விஷயம் தெரிந்து போலீசார் பிடித்து விடுவார்களோ? என்ற பயத்தால் வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்