மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்

மீன்வளத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2017-07-14 22:30 GMT
சென்னை,

அப்போது அவர் கூறியதாவது:-

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் 20 ஆயிரம் பணியாளர்கள் உடனடியாக பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 கூடுதலாக வழங்கப்படும். இதற்கான ரூ.5 கோடி செலவினம் சங்க நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும்.

சென்னை ராயபுரத்தில் மீன்வளப் பயிற்சி நிலையமும், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்க காஞ்சீபுரம் மாவட்டம் முட்டுக்காட்டில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி மையமும் ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், சென்னையில் உள்ள வாணியஞ்சாவடி முதுகலை பட்ட மேற்படிப்பு வளாகத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக ‘மீன்வள வணிக மேலாண்மை’ முதுகலைப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் நடப்பாண்டில் இருந்து சேர்க்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் உதவியுடன், கடல்சார் உயிர் தொழில்நுட்ப முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 12 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

மீன்வளத்துறையால் சேத்துப்பட்டு ஏரியில் அமைக்கப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமைப் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் தேவைக்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒரு பன்னடுக்கு வாகன நிறுத்தகம் 9 அடுக்குகள் கட்டுவதற்கு வடிவமைக்கப்பட்டு 5 அடுக்குகள் மட்டும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் அருகில் அமைக்கப்பட்டு இருக்கும் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தினைப் பயன்படுத்தும் பயணிகளின் வாகன நிறுத்தத் தேவைகளையும் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு இரு நிறுவனங்களும் வருவாயினை பகிர்ந்து கொள்ளும் வகையில் கூடுதல் தளங்கள் கட்டப்படும்.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய வர்த்தகர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய தேசிய வண்ணமீன் வானவில் பேரங்காடி சென்னை மாதவரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 

மேலும் செய்திகள்