காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி இருக்கிறார்.

Update: 2017-07-13 19:59 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ந் தேதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்துக் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதகமானவற்றைச் சுட்டிக் காட்டித் தமிழகமும் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த 12-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கர்நாடக மாநிலம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பாரபட்சமானது, நீர்ப்பாசனச் சட்டத்திற்கு எதிரானது. சென்னை மாகாணமும், மைசூரு மாகாணமும் 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் விடுதலை பெற்ற பிறகு காலாவதியாகிவிட்டன. தமிழ்நாட்டில் பாசனப் பரப்புகள் அதிகரித்துவிட்டதால் அதற்கு ஏற்ப கர்நாடகம், காவிரி நீரை வழங்க முடியாது. தமிழகம் அதிக நீரைக் கேட்பதால்தான் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது’ என்று தெரிவித்து இருக்கின்றார்.

கர்நாடக அரசு தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு அதிகரிக்கப்பட்டு, காவிரியில் அதிக நீர் கோருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பச்சைப் பொய் ஆகும். எனவே உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் கர்நாடக அரசு அதை ஏற்கப்போவது இல்லை என்பது கடந்த காலங்களில் தெளிவாகிவிட்டது.

காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்