22 கப்பல்களுடன் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி

வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Update: 2017-07-10 00:00 GMT

சென்னை

வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை தந்த கப்பல்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. தொடர்ந்து 2–வது முறையாக வங்கக்கடலில் சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கடற்பகுதிகளில் 2 கட்டமாக பயிற்சி நடக்கிறது.

இந்த பயிற்சி கடந்த 7–ந் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே அரபிக்கடல் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வருகிற 17–ந் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கூட்டு கடற்பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சென்னையில் 3 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் இந்தோ–ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 3 நாட்டு கடற்படை வீரர்களும் தொழில்நுட்ப ரீதியிலான கருத்துகளை பகிர்ந்துகொள்ள உள்ளனர். அத்துடன் ரோந்துப்பணி, உளவு பார்ப்பது, நீர்மூழ்கி கப்பல் போர் பயிற்சி, மருத்துவ நடவடிக்கைகள், கடலில் கப்பல் சேதத்தை தவிர்ப்பது, ஹெலிகாப்டர்களை இயக்குவது, கடலில் மிதக்கும் வெடி பொருட்களை கண்டுபிடித்து அழிப்பது, தேடல் மற்றும் பறிமுதல் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

மேலும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியிலும் பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, ஐ.என்.எஸ். ரன்விஜய், ஐ.என்.எஸ். ஷிவாலிக், ஐ.என்.எஸ். சயாத்திரி, ஐ.என்.எஸ். ஜோதி, ஐ.என்.எஸ். கமோட்டா, ஐ.என்.எஸ். கிர்பான் மற்றும் இ.கே.எம். கப்பல், பி8ஐ–01, எஸ்.ஓ.எப். ஆகிய கப்பல்கள் ஈடுபடுகின்றன.

இதுதவிர உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் (சி.வி.என்–68), ஏவுகணைகளை வழிநடத்தும் கப்பல் யு.எஸ்.எஸ். பிரின்ஸ்டன் (சிஜி.59), ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் கப்பல் யு.எஸ்.எஸ். ஹோவர்ட் (டிடிஜி–83), யு.எஸ்.எஸ். ஷூப் மற்றும் யு.எஸ்.எஸ். கிட் (டிடிஜி 100) மற்றும் பி–8ஏ போஸிடான் விமானம் தாங்கி கப்பல் மற்றும் விரைவாக செல்லும் லாஸ் ஏஞ்சல்ஸ் நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பங்கேற்கின்றன.

ஜப்பான் நாட்டு கடற்படையில் உள்ள சுய பாதுகாப்பு படை கப்பலான ஜெ.எஸ்.இஜிமோ (டிடிஎச்– 183). ஜெ.எஸ்.சஜாநமி (டிடி113) உள்ளிட்ட 22 போர்கப்பல்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றன. தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 3 கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தன.

இதில் வருகை தந்த அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளை சென்னையில் உள்ள கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் வரவேற்றனர். மீதம் உள்ள அனைத்து கப்பல்களும் இன்று சென்னை கடற்பகுதிக்கு வருகின்றன.

தொடர்ந்து கப்பல்களில் வரும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவை சேர்ந்த ராணுவ தளபதிகள் போர் பயிற்சி குறித்து நிருபர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். அதைத்தொடர்ந்து பயிற்சி தொடங்குகிறது.

மேற்கண்ட தகவல்களை இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்