அ.தி.மு.க. அதிருப்தி தொண்டர்கள் காங்கிரசில் இணையலாம்
அ.தி.மு.க. அணிகள் ஒன்று இணைய வழி இருப்பதாக தெரியவில்லை.
சென்னை,
அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் காங்கிரசில் இணையலாம் என்று திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.டேனியல்ராஜ் தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார். அவருடன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.கோபால், ஜி.அனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இணைந்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.தயாளனும் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் இருக்கிற அ.தி.மு.க. தொண்டர்கள் வருத்தத்திலோ, எந்த அணியிலும் சேராமல் பிரிந்தோ இருந்தால் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் காங்கிரஸ். அவர்களை எல்லாம் காங்கிரசில் சேருமாறு அன்புடன் அழைக்கிறேன்.ஜெயலலிதா இறந்த பிறகு நாங்கள் இதுவரையில் திறந்த அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால் பிரிந்து இருக்கும் அவர்கள் எல்லாம் ஒன்று சேரும் முயற்சி நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே அதற்கு குறுக்கே தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அழைக்கவில்லை.
ஆனால், தற்போது அவர்கள் ஒன்று சேர்வதற்கான வழி இருப்பதாக தெரியவில்லை. எனவே, அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொள்ளலாம். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.