தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சகிக்க முடியாது அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சகிக்க முடியாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-07 19:41 GMT
சென்னை, 

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வந்த தியேட்டர் அதிபர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். தமிழக அரசுடன் போராடி கோரிக்கையில் வெற்றி பெற முடியாத தியேட்டர் அதிபர்கள், இப்போது டிக்கெட் கட்டணத்தை 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

கேளிக்கை வரி குறித்து முடிவெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடிவுகள் தெரியும் வரை, தற்போதுள்ள நிலையே நீடிப்பது தான் முறை. மாறாக பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பாகவே டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது புதுமையாக உள்ளது.

ஜி.எஸ்.டி வரியும், கேளிக்கை வரியும் விதிக்கப்படுவதால் தங்களின் லாபம் குறைந்து விட்டதாக புலம்பும் தியேட்டர் அதிபர்கள், இதற்கு முன் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் வரை 90 சதவீதம் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், அந்த வரியையும் ரசிகர்களிடமிருந்து வசூலித்து கொள்ளையடித்தன. முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியான போதெல்லாம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு வசூலித்து பெரும் லாபம் பார்த்தன.

இப்போதும் கூட தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் குளிர் பானங்கள் பல மடங்கு அதிக விலை நிர்ணயித்து விற்கப்படுகின்றன. பல தியேட்டர்கள் சொந்தமாக இணையதளம் வைத்துக்கொண்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றன. இந்த சேவைக்கு 10 பைசா கூட செலவாகாது என்றாலும், முன்பதிவு கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.30 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறாக பல வழிகளில் ரசிகர்களின் பணத்தை பிடுங்கும் தியேட்டர்கள் இப்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சகிக்க முடியாது.

தியேட்டர்களின் கொள்ளையை கண்டுகொள்ளாத அரசு, இப்போது கட்டண கொள்ளையையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத் தான் பேரம் பேசப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. தமிழக அரசு உடனடியாக கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும்; தியேட்டர்களும் கட்டணத்தை குறைக்கவேண்டும். அதுமட்டுமின்றி, தியேட்டர்களில் நொறுக்கு தீனிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும் அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கொள்ளைக்கு சட்டப்படியாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்