தமிழகம் முழுவதும் ரூ.5,589 கோடி செலவில் 1.86 லட்சம் வீடுகள் கட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரூ.5,589 கோடி செலவில் 1.86 லட்சம் வீடுகள் கட்டப்படும் என எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

Update: 2017-07-05 08:26 GMT

சென்னை,

சட்டசபையில் இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-


அம்மா கடந்த 6 ஆண்டுளாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார்.  அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்தும் என்பதை இம்மாமன்றத்திற்கு  தெரிவித்துக் கொள்கிறேன்.

1. தமிழ்நாடு அரசு ஒரு புதிய குடியிருப்பு மற்றும் உறைவிடக் கொள்கை உருவாக்கும். வீடு கட்டும் செலவினத்தைக் குறைத்தல், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை உள்ளடக்கிய அனைவருக்கும் போதுமான வீட்டுவசதியினை கிடைக்க செய்தல்; வாங்கத் தக்க விலையில் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த  வீடுகள் கட்ட இடம் ஒதுக்கீடு செய்தல்;

அனைவருக்கும் அடிப்படை வசதிகளான மின் சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்குதலை உறுதி செய்தல்; நகர்ப்புற மக்களின் மாறி வரும் சமூகப் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு நகர்ப் புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; நீடித்த நிலையான சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறையினை நகர்ப்புறங்களில் உறுதி செய்தல்; நிலையான நகரமயமாக்குதலை ஊக்குவித்தல்;

சட்டம் மற்றும் ஒழுங்கு முறை அமைப்புகளில் பொருத்தமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல்; பெருந்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் திருத்தங்கள் கொண்டு வருதல்; ஒற்றைச் சாளர முறையை உருவாக்குதல்; மனை வரைபடம் ஒப்புதல் மற்றும் கட்டட அனுமதி பெற காலக்கெடு நிர்ணயித்தல்; மூத்த குடிமக்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, வீடுகள் கட்டுதல் மற்றும்  அதற்குரிய உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்; இடரற்ற வாடகை வீடு வழங்கும் முறையினை உருவாக்குதல் போன்றவை இக்கொள்கையின் 
சிறப்பம்சங்களாகும்.

2. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்ட நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்புத் தொகை மற்றும் தமிழக அரசால் அளிக்கப்படும் பற்றாக்குறை நிதி ஆகிய வற்றை பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம், எர்ணாவூரில் 676 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6,874 வீடுகள்  குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு கட்டித் தரப்படும்.

3. பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் வகைப்பாட்டின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 1,86,308 தனி வீடுகள் 5 ஆயிரத்து 589 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.  மேலும், நடப்பாண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும்  வகைப்பாட்டின் கீழ் ஒரு குடியிருப்பு 10 இலட்சம் ரூபாய் வீதம் 14,828 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,482 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.  மேற்கண்ட இரண்டு வகைபாட்டின் கீழ் கட்டடப்படும் குடியிருப்புகளுக்கு  மாநில அரசின் மானியமாக 2,007 கோடியே 53 இலட்சம் ரூபாய் அளிக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்