அன்னிய செலாவணி மோசடி வழக்கு சசிகலா மீது புதிய குற்றச்சாட்டு பதிவு
அந்நியச் செலாவணி வழக்கில் சசிகலா இரண்டாவது முறையாகக் காணொலிக் காட்சி மூலம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை,
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளி நாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 1996 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதில் சசிகலா மீது மட்டும் 4 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சசிகலா மற்றும் பாஸ்கரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு கடந்த மாதம் 21-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது பாஸ்கரன் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறை யில் உள்ள சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து, சசிகலாவிடம் கேள்வி கேட்டு, அவர் அளிக்கும் பதில்களை நீதிபதி ஜாகீர்உசேன் பதிவு செய்து கொண்டார்.
இந்த நிலையில் சசிகலா மீதான மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கு நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா பரப்பனஅக்ரஹாரா சிறை யில் இருந்தபடி, கணொலிக் காட்சி விசாரணைக்கு ஆஜரானார்.
அவர் சிறை கைதிகள் உடுத்தியிருக்கும் சீருடையை அணிந்திருந்தார். காலை 11.15 மணி முதல் 12.40 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் மத்திய அமலாக்கப்பிரிவு சுமத்தியிருந்த கேள்விகளை சசிகலாவிடம், நீதிபதி ஜாகீர்உசேன் கேட்டார். பல கேள்விகளுக்கு தெரியாது, நினைவில்லை என்று சசிகலா பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சசிகலா சொன்ன பதிலை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று சசிகலாவிடம், குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதான மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அன்று அவர்களிடம் இந்த வழக்கிற்கான குற்றச்சாட்டு பதிவுகள் செய்யப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.