சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓய்வறையில் ஓ.பன்னீர் செல்வத்துடன், அமைச்சர்கள் திடீர் ஆலோசனை

சட்டசபையில் உள்ள ஓய்வறையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-15 23:15 GMT
சென்னை,


ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுபட்டது. அ.தி.மு.க. (அம்மா) அணி டி.டி.வி. தினகரன் தலைமையிலும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் செயல்பட்டு வந்தநிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி. தினகரன் ஆதரவு அணி உருவானது. அவருக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க. (அம்மா) அணியும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையுமா? என்ற கேள்வி அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்தது.

ஓய்வறைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்

இந்தநிலையில், சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தை 2 அமைச்சர்கள் நேற்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓய்வறைக்கு வந்தார்.

அவருடன் எம்.எல்.ஏ.க்கள் கே.பாண்டியராஜன், செம்மலை ஆகியோரும் வந்தனர்.

அமைச்சர்கள் சந்திப்பு

அந்த அறையில் ஓ.பன்னீர் செல்வம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேராக சந்தித்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒன்றாக அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டனர். அவர்கள் பேசிக்கொள்ளும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பாண்டியராஜன், செம்மலை ஆகியோர் ஓய்வறையை விட்டு வெளியே வந்தனர்.

சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக ஓ.பன்னீர்செல்வத்துடன், அமைச்சர்கள் இருவரும் பேசினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு வெளியே நின்றிருந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளே சென்று பன்னீர்செல்வத்தை பார்த்தனர்.

அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்துடன் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததா? அல்லது திட்டமிடப்பட்டு சந்திப்பு நடந்ததா? என்பது தெரியவில்லை. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணக்கம் காட்டும் அணிகள்

ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி. தினகரன் அணி என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 அணிகளாக இருந்தாலும் சட்டசபைக்குள் இணக்கம் காட்டியே வருகின்றனர். சட்டசபைக்கு வெளியே வார்த்தை போர்களில் வெடிக்கும் அவர்கள் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது மயான அமைதியையே கடைப்பிடிக்கிறார்கள். சட்டசபை கூட்ட முதல் நாளில் தி.மு.க. அமளியில் ஈடுபட்டபோதும், நேற்று தி.மு.க. வெளிநடப்பு செய்தபோதும் அவர்கள் மிகவும் அமைதியாகவே இருந்தார்கள்.

மேலும் செய்திகள்