சென்னை சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் காரில் வைத்திருந்த ரூ.2 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கியது

சென்னை சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் காரில் வைத்திருந்த ரூ.2 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கியது.

Update: 2017-06-14 21:00 GMT
சென்னை,

சென்னை சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் காரில் வைத்திருந்த ரூ.2 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கியது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு வக்கீல் மற்றும் சப்–இன்ஸ்பெக்டரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்லாத ரூபாய் நோட்டுகள்

சென்னை சூளைமேடு சங்கராபுரம் பகுதியில் சீனிவாசா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நேற்று இரவு சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சிவக்குமரன் (வயது 41) என்பவர் தனது காரில் வந்து இறங்கினார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாநில உளவு பிரிவு போலீஸ் (ஐ.பி.) சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரான ஆல்பர்ட் என்பவரை பார்ப்பதற்காக சிவக்குமரன் காரில் வந்ததாக தெரிகிறது. சிவக்குமரன் வந்த காரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசார் சூளைமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பறிமுதல்

உடனே சூளைமேடு போலீசார் விரைந்து சென்று சிவக்குமரனின் காரை சோதனை போட்டனர். அப்போது காருக்குள் கத்தை, கத்தையாக ஒரு கோடியே 95 லட்சத்துக்கு, 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த பணம் அனைத்தும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

சிவக்குமரன் மற்றும் ஆல்பர்ட் ஆகிய 2 பேரிடமும் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று இரவு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் போலீசார் தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.

தீவிர விசாரணை

சிவக்குமரன் மற்றும் ஆல்பர்ட் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூளைமேடு போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்