எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி நடத்தப்படும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி நடத்தப்படும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Update: 2017-06-14 07:37 GMT
சென்னை

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 'எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்' குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என கோரினார். எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார். சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யபட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி மசோதாவை தாக்கல் செய்தார்.சட்டசபையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீது பேரவையில் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

சரவணன் எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர  வலியுறுத்தி தொடர்ந்து  அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளியேற்றபட்டனர்.

சட்டசபையில் இருந்து மு.க ஸ்டாலின் வெளியேற்றபட்டதால் சட்டசபை வளாகம் முன் தி.மு.க உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில், ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

மு.கஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவ்து:-

வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குதிரை பேரம் நடந்தது அம்பலமாகியுள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி நடத்தப்படும் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். கவிழ்க்கப்பட வேண்டும். சபாநாயகர் சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார்.என கூறினார்.

திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் கூறியதாவது:-

எம்எல்ஏக்கள் பணம் பெற்றது தொடர்பான வீடியோ குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம், எங்களுக்கு பதிலளிக்க முடியாமல் பேரவையில் இருந்து வெளியேற்றினர். சட்டப்பேரவையில் சரவணனை பேச விடாமல் தடுக்கின்றனர்  என கூறினார்.

மேலும் செய்திகள்