ஈரோட்டில் ரூ.736 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

Update: 2017-06-11 21:08 GMT

ஈரோடு,

ஈரோட்டில் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு ரூ.736 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் கோட்டை

ஈரோடு ஜெயலலிதாவின் கோட்டை. 2016 சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற வேட்பாளர்களும் வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஒரே மாவட்டம் இது.

நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளின் பிரச்சினைகள், துயரங்கள் குறித்து தெரிந்தவன். எனவே விவசாயிகள், அணைகள், குளங்கள், ஏரிகளில் இருந்து, வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.

மணல் விலை குறையும்

அதுமட்டுமல்ல இன்றைக்கு மணல் விலை அதிகரித்துக்கொண்டு செல்வதாக என்னிடம் கருத்து தெரிவித்தார்கள். ஏற்கனவே, பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அரசே நடத்தி வருகிறது.

தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில், மணல் குறைந்த விலையில் உங்கள் இல்லம் தேடி வரும். தேவையான அளவிற்கு, அரசு மணல் வழங்கும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

எம்.எல்.ஏ. புறக்கணிப்பு

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டார். ஏற்கனவே இதற்கு முன்பு கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டபோதும், தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை. அப்போது தனியார் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் வரும்போது கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருந்தார்.

ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் அரசு விழாவிலேயே அவர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருப்பது, தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இல்லை என்பதை உறுதி படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்