அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை குழு கலைப்பு; ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார்.

Update: 2017-06-11 21:07 GMT

பூந்தமல்லி,

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, உள்ளாட்சி தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி, கீதாஞ்சலி திடலில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் பெண்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினார்கள். மேள, தாளங்கள் முழங்க வழியெங்கும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

6-வது மாவட்டம்

தர்மயுத்தம் தொடங்கி 125 நாட்கள் ஆகிவிட்டது. நமது பாதை லட்சியபாதை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை பாதையில் சென்றுகொண்டு இருக்கிறோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம்.

தற்போது 6-வது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் 26 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் அலை, தொண்டர்களின் அலை நம் பக்கம் உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த ஆட்சி இருக்கக்கூடாது

கழகம் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது, அதனை மீட்க வேண்டும். தற்போது இருக்கும் நிலையை பார்க்கும்போது கழகமும், தொண்டர்களும் நம்மிடம் தான் இருக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் வாய்ப்பை மக்கள் தந்தார்கள். அந்த தேர்தலில் ஜெயலலிதா முதல்வர் ஆகவேண்டும் என்று தான் வாக்கு கேட்டோம். நமது துரதிர்ஷ்டம் ஜெயலலிதா இறந்துவிட்டார்.

அதன்பிறகு அவரது வழியில் ஆட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றபோது தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அதன் பின் தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று மக்கள் முடிவு எடுத்து உள்ளனர்.

பேச்சுவார்த்தை குழு கலைப்பு

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைப்பு தேவையா? என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த முடிவை யார் சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ, அவர்களே சொல்லிவிட்டார்கள். முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இணைப்பு என்பது கிடையாது. நமது அணி சார்பாக பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு இன்றுடன் கலைக்கப்படுகிறது.

(இதை அறிவித்தவுடன் தொண்டர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். மேடையில் இருந்தவர்கள் ஓடிவந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுத்தனர்)

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. பழைய சகாக்கள் திரும்பிவந்தால் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கும். திரும்பி வரவில்லை என்றால் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள்

கூட்டத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், செய்தி தொடர்பாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செம்மலை, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., ஜே.சி.டி.பிரபாகரன், பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்