குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்; எடப்பாடி பழனிசாமி அறிக்கை
குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
விழிப்புணர்வுஉலகமெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஆட்படுத்தப்படும் குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு முறையான கல்வி அளித்து, அவர்களது எதிர்கால வாழ்வினை மேம்படுத்திட வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.
தமிழ்நாடு அரசு, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் களைந்திடவும், அறிவும் வலிமையும் பொருந்திய புதிய தலைமுறையை உருவாக்கிடவும், கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத்தொகை, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத்தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அவர்களது கல்விக்காலம் முழுமைக்கும் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒத்துழைப்புகுழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம், தற்போது மத்திய அரசால் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவது முற்றிலுமாக தடைசெய்து வெளியிட்ட சட்டத்திருத்தத்தையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்நாளில், குழந்தைகளின் உரிமைகளை மதித்து, குழந்தைத்தொழிலாளர் இல்லா மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையினை எய்திட இவ்வரசுமேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு பெற்றோர்களும், பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.