முதல்–அமைச்சருடன் நடந்த சந்திப்பில் உடன்பாடு விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

முதல்–அமைச்சருடன் நடந்த சந்திப்பில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2017-06-10 21:45 GMT

சென்னை,

கோரிக்கைகளை 2 மாதத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும், நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி தனது சந்திப்பின்போது, விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தொடர் போராட்டம்

இந்தநிலையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும் தேசிய–தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே நேற்று முன்தினம் தொடர் போராட்டம் தொடங்கியது.

திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் இடுப்பில் துண்டு கட்டியவாறு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடத்தியது போன்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் என விவசாயிகள் 32 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

போலீசார் குவிப்பு

இந்தநிலையில் 2–வது நாளான நேற்று சங்கிலியை உடலில் கட்டி, கைவிலங்கு மாட்டியபடி நூதன போராட்டத்தில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் முடிவு எடுத்திருந்தனர். இதையடுத்து போலீஸ் தரப்பில் போராட்டத்தை கைவிட்டு, வீட்டுக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று விவசாயிகள் விடாப்பிடியாக இருந்தனர்.

இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு, நேரில் வந்து ஆதரவு தெரிவிக்குமாறு சமூக ஊடகங்களின் மூலம் இளைஞர்களுக்கு, சிலர் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போல கட்டுக்கு அடங்காத கூட்டம் வந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் முன்னெச்சரிக்கையாக இருந்தனர். இதனால் சேப்பாக்கத்தில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வாலஜா சாலையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 மீட்டர் முன்பு இரு மார்க்கங்களிலும், இரும்பு தடுப்புகள் போடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசவேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளிடம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அழைத்து செல்வதாக கூறினர். அய்யாக்கண்ணு, பழனிவேல், கிட்டப்ப ரெட்டியார், விமலநாதன் மற்றும் ஜோதிமுருகன் ஆகிய 5 விவசாயிகளை காலை 10.30 மணிக்கு வேனில் கோட்டைக்கு அழைத்து சென்றனர்.

விவசாயிகள் மேலாடை அணியாமல் அரை நிர்வாணத்துடன் இருந்ததால் அவர்களுக்கு அரசு சார்பில் வெள்ளை நிற சட்டைகள் வாங்கி கொடுக்கப்பட்டது. அந்த சட்டைகளை அணிந்து கொண்டு, விவசாயிகள் 5 பேரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முடிந்து 11.30 மணியளவில் விவசாயிகள் வெளியே வந்தனர். இந்த சந்திப்பு குறித்து அய்யாக்கண்ணுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

பாசன சங்கம்

அதற்கு அவர், ‘‘எங்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினோம். அதில் பலவற்றை நிறைவேற்றுவதாக கூறி இருக்கிறார். போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, சேப்பாக்கத்தில் உள்ள மற்ற விவசாயிகளுடன் கலந்து பேசி அறிவிப்போம். விவசாயிகளுக்காக ரூ.100 கோடி செலவில் பாசன சங்கம் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் கூறியிருக்கிறார். மத்திய அரசை பொறுத்தவரையில் விவசாயிகளை அடிமைகளாகவும், 2–ம் தர மக்களாகவும் பார்க்கிறது’’ என்றார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் 5 பேரும் போலீஸ் வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். 11.40 மணிக்கு அய்யாக்கண்ணு தலைமையிலான 5 விவசாயிகளும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உள்ள போராட்ட களத்துக்கு வந்தனர்.

அப்போது முதல்–அமைச்சர் உடனான சந்திப்பின்போது, தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அதற்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதில்கள் குறித்து விவசாயிகளிடம், அய்யாக்கண்ணு விளக்கி கூறினார்.

போராட்டம் வாபஸ்

பின்னர் தற்போதைய சூழலில் போராட்டத்தை தொடரவேண்டுமா? அல்லது தற்காலிகமாக வாபஸ் பெறலாமா? என்று கைகளை உயர்த்தி கருத்துகளை தெரிவிக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பெரும்பாலான விவசாயிகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.

இதையடுத்து விவசாயிகள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி, எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையங்களுக்கு கொண்டுபோய் விடப்பட்டனர். மேலும் சில விவசாயிகளை போலீசார் வேனில் ஏற்றிச்சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் விட்டனர். முன்னதாக விவசாயிகள் அனைவருக்கும் போலீஸ் தரப்பில் மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் அரிசி

இதுகுறித்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை 2 மாதத்துக்குள் பெற்று தருவதாக முதல்–அமைச்சர் தெரிவித்தார். விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்து யோசனை செய்து தங்களுடைய முடிவை, விரைவில் அறிவிப்பதாக முதல்–அமைச்சரும், நிதி அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நெல்லை 292 விவசாயிகளிடம் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

இதனை ஒரு வாரத்தில் திருப்பி அளிக்க ஏற்பாடு செய்வதாக முதல்–அமைச்சர் கூறினார். அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்குவதாகவும் கூறினார். பிளாஸ்டிக் அரிசி வந்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், அதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதனை ஏற்றுக்கொண்டு பிளாஸ்டிக் அரிசியை தமிழகத்துக்குள் அனுமதிக்க விடமாட்டோம் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

முதல்–அமைச்சர் உறுதி

மேலும் நகைகள் மீது பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளின் நகைகளை 6 மாத காலத்துக்கு ஏலம் விடக்கூடாது என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இதேபோல ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்றும் தெரிவித்தார்.

ஆகவே முதல்–அமைச்சர் உறுதி அளித்ததை ஏற்று எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். ஒரு வேளை 2 மாதங்களுக்குள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராடுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்