பா.ஜ.க. அறிவித்த பிறகு ஜனாதிபதி வேட்பாளரை எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்த பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2017-06-09 22:45 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் பொழிச்சலூர், கோவூர் பகுதியில் உள்ள கோவில் குளங்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். அதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆளும் கட்சியின் ரோஷம்

தமிழகத்தில் மழை பொய்த்துப் போன காரணத்தால், குடிநீருக்கும், விவசாயப் பாசனத்துக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வரக்கூடிய காலத்தில் போதிய நீரை சேமிக்கும் வகையில், தி.மு.க. சார்பில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு, நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து, குறிப்பாக, தி.மு.க.வின் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உறுதியாக இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, ஏறக்குறைய 50 சதவீதம் முதல் 60 சதவீத பணிகள் நிறைவேறியுள்ளன.

தி.மு.க.வினர் இந்தப் பணிகளில் ஈடுபட்ட பிறகு, ஆளும் கட்சியினருக்கு ரோஷம் வந்தது போல, திடீரென விழித்துக்கொண்டு, அரசின் சார்பில் தூர் வாரப்படும் என முதல்-அமைச்சரே அறிவிப்பு வெளியிட்டு, அதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக கூறினார்கள்.

முடங்கிப்போனது

அண்மையில் மேட்டூர் அணையை தூர்வாருவதாக அறிவித்து, முதல்-அமைச்சரே அதில் நேரில் பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்ததாக செய்திகள் வந்தன. ஆனால், தொடங்கப்பட்ட பணிகள் அப்படியே முடங்கிப்போய் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

எனவே, ஆளும் கட்சியைப் பொறுத்தவரையில், பல அணிகளாக பிரிந்துள்ளதால், இந்த ஆட்சியைக் காப்பாற்றி, தக்கவைத்துக் கொள்வது, அதன் மூலமாக இதுவரை அடித்து வந்த கொள்ளையைவிட இன்னும் அதிகமாக கொள்ளையடிப்பது என்றப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்களே தவிர, வேறெதிலும் ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியது.

தமிழக நதிகளை இணைக்க வேண்டும்

நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு தந்திருக்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் இணைப்புப் பணியை மேற்கொள்ளும் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று, திட்டமிடப்பட்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அப்பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டதா என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை. எனவே, தமிழக நதிகளை இணைக்கும் பணிகளில் உடனடியாக தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரவளிப்பீர்களா?.

பதில்:- எதிர்க்கட்சிகளை எல்லாம் சோனியா காந்தி ஒன்று திரட்டி, அந்தக் கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு எந்த நிலையில் வேட்பாளரை அறிவிக்கிறது என்பதை பொறுத்து முடிவெடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி முடிவு செய்யப்படும்.

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை அ.தி.மு.க. ஆதரித்தால் என்ன தவறு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளாரே, இதன் மூலம் இந்த ஆட்சியின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா?.

பதில்:- நாங்கள் சொல்வதை அவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தான் இதன் அர்த்தம். மாநில உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு, மாநில அரசை ஒரு அடிமை போல நடத்தும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே நாங்கள் சொல்லி வருகிறோம். அதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்படியே வழிமொழிந்து ஏற்றுக்கொண்டு இருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்