ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்; போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடுக்கும் உத்தரவை கடந்த மாதம் மத்திய அரசு பிறப்பித்தது.
சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் சூரஜ் உள்ளிட்ட மாணவர்கள், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டம் முடிந்ததும், அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து மாட்டுக்கறியை சாப்பிட்டனர்.
அப்போது ஐ.ஐ.டி.யில் படிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ் என்ற மாணவர், மாட்டுக்கறி விருந்து நடத்திய சூரஜை தாக்கினார். இதில், படுகாயமடைந்த சூரஜ், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டூபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐகோர்ட்டில் மனுஇந்தநிலையில், ஐ.ஐ.டி. மாணவர்கள் அர்ஜூன் ஜெயக்குமார், சாமிநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாணவர் மனிஷ் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை மயிலாப்பூர் துணை கமிஷனர் மேற்பார்வையில் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால் துணை கமிஷனர் பதவிக்கு குறையாத வேறு ஒரு அதிகாரியின் தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பாதுகாப்பு வழங்கவேண்டும்இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜான்சத்தியன் ஆஜராகி, மனிஷ் மீது ஏற்கனவே பல மாணவர்கள் ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு புகார் செய்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்களுக்கு போலீசார் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், இந்த மனுவுக்கு பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார். விசாரணையை 12–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.