டி.டி.வி. தினகரனுடன் இதுவரை 30 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
சென்னை,
இதுவரை 30 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய அணிபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்ற போது அவருடன் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் இன்பதுரை(ராதாபுரம்), பாத்திபன்(சோளிங்கர்), சுப்பிரமணியன்(சாத்தூர்), தங்கதுரை(நிலக்கோட்டை), ஜக்கையன்(கம்பம்), ஏழுமலை(பூந்தமல்லி), கதிர்காமு(பெரியகுளம்), ஜெயந்தி(குடியாத்தம்), பாலசுப்பிரமணியன்(ஆம்பூர்) ஆகியோரும் உடன் சென்றனர்.
இதைதொடர்ந்து தினகரன் தலைமையில் அ.தி.மு.க.வில் புதிய அணி உருவானது. சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் தினகரனுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்த 11 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பழனி(ஸ்ரீபெரும்புதூர்), ராஜன்செல்லப்பா(மதுரை), முத்தையா(பரமக்குடி), செந்தில்பாலாஜி(அரவக்குறிச்சி), தோப்பு வெங்கடாச்சலம்(பெருந்துறை), பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி), தூசிமோகன்(செய்யாறு), பன்னீர்செல்வம்(கலசப்பாக்கம்), மாரியப்பன் கென்னடி(மானாமதுரை), முருகன்(அரூர்), உமாமகேசுவரி(விளாத்திகுளம்), சந்திரபிரபா முத்தையா(ஸ்ரீவில்லிபுத்தூர்), கோதண்டபாணி(திருப்போரூர்), இளம்பை தமிழ்செல்வன்(பெரம்பலூர்) ஆகிய 14 பேர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் 5 எம்.எல்.ஏ.இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ்(திருப்பரங்குன்றம்), நீதிபதி(உசிலம்பட்டி), பெரியபுள்ளான் என்ற செல்வம்(மேலூர்), செல்வமோகன்தாஸ்(தென்காசி), நரசிம்மன்(திருத்தணி) ஆகிய 5 பேர் டி.டி.வி. தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு தனக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தனர்.
அதேபோன்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தங்களது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தனர். இதன் காரணமாக அவரது வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடி இருந்தனர். இதனால் தினகரனின் வீடு அமைந்துள்ள பகுதி பரபரப்பாக இருந்தது.
நடிகை விஜயசாந்திநடிகை விஜயசாந்தியும் தினகரனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இதேபோன்று புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தினகரனை நேரில் சந்தித்தனர்.
தென்மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க ஒத்துக்கொண்ட போதிலும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியையோ, டி.டி.வி.தினகரனையோ நேரில் சந்தித்தால் ஏதாவது ஒரு வழியில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதி எம்.எல்.ஏ.க்கள் பலர் சென்னை வருவதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
செல்போனில் ஆதரவுதற்போது ஆதரவு தெரிவித்துள்ள 30 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து சில எம்.எல்.ஏ.க்கள் செல்போன் மூலம் டி.டி.வி.தினகரனிடம் பேசி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுபோன்று ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி அவரிடம் செல்போனில் பேசினீர்களா? என்று கேட்டதற்கு அவர்கள் அதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.