பண மோசடி விவகாரம்: வேந்தர் மூவிஸ் மதனின் நீதிமன்ற காவல் 20–ந் தேதி வரை நீட்டிப்பு

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2017-06-06 19:40 GMT

சென்னை,

பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 10 கோடி ரூபாய் கோர்ட்டில் டெபாசிட் செலுத்தி மதன் ஜாமீனில் வெளியே வந்தார்.

மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையினர் மதனை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு சென்னை 3–வது கூடுதல் செசன்சு நீதிபதி அருள்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதனை அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதன் பின்பு மதனின் நீதிமன்ற காவலை 20–ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே மதன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை (8–ந் தேதி) தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்