அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்ற மாணவி ஹேமலதா சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் நேர்முகத்தேர்வுக்கு பயிற்சி பெற்றவர் ஆவார்.

Update: 2017-06-06 22:45 GMT

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு சமீபத்தில் நடந்தது.

நேர்முகத்தேர்வில் ஹேமலதா முதலிடம்

இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 145 பேருக்கு டெல்லியிலும், சென்னையிலும் நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

1,099 பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த 17 பெண்கள் உள்பட 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், அகில இந்திய அளவில் நேர்முகத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி ஹேமலதா மனிதநேய மையத்தில் நேர்முகத்தேர்வுக்கு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, நெரிஞ்சிப்பேட்டை ஆகும். இவர் எம்.இ. படித்தவர். பெற்றோர் முருகேசன்–ஜோதிலிங்கம்.

நேர்முகத் தேர்வில் முதலிடம் பிடித்தது பற்றி மாணவி ஹேமலதா நிருபரிடம் கூறியதாவது:–

மனிதநேய பயிற்சி மையமே காரணம்

மனிதநேய பயிற்சி மையத்தால் தான் சிவில் சர்வீசஸ் தேர்வில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன். பி.இ. வேளாண்மை மற்றும் நீர்பாசனம் தொடர்பான படிப்பை சென்னை கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். படிக்கும்போதே மனிதநேய பயிற்சி மையம் சார்பில் தினசரி கல்லூரிக்கு தேடிவந்து மாலை நேரத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து பயிற்சி அளித்தனர். அந்த வகுப்பில் தினமும் பயிற்சி பெற்றேன். பிறகு அதே கல்லூரியில் எம்.இ. நீர்வளம் குறித்து படித்தேன். அப்போதும் கல்லூரியில் மாலை நேரத்தில் மனிதநேய மையம் கொடுக்கும் பயிற்சியில் சேர்ந்து படித்தேன்.

முதல் முறையே வெற்றி

மனிதநேய மையம் அளித்த பயிற்சி காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதல் கட்டமாக முதல்நிலை தேர்விலும் தேர்ச்சி பெற்று, மெயின் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்றதால் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்திய நேர்முகத்தேர்வின் பயிற்சியிலும் சேர்ந்தேன். அந்த பயிற்சி நல்ல பயன் உள்ளதாக இருந்தது. யு.பி.எஸ்.இ. நடத்திய நேர்முகத்தேர்வுக்கு டெல்லிக்கு விமானத்தில் சென்று வந்தேன். நேர்முகத்தேர்வை நன்றாக செய்தேன். அதில் திருப்தி இருந்தது. டெல்லி பயணத்துக்கான அனைத்து செலவு மற்றும் ஏற்பாடுகளும் மனிதநேய மையம்தான் செய்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முறையாக தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. அதற்கு காரணம் நேர்முகத்தேர்வுக்கு பலமுறை மனிதநேய மையம் பயிற்சி அளித்தது.  இவ்வாறு ஹேமலதா தெரிவித்தார்.

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்தவர்கள் ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 முறை முதல் இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்